*விவசாயிகள் வேண்டுகோள்
தஞ்சாவூர் : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர நெல் தானியங்கள் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா குருவை தாளடி என மூன்று போக நெல் சாகுபடி நடைபெறும்.
அது தவிர கரும்பு, வாழை, தென்னை, எள், பயிர் வகைகள், கீரை வகைகள், பருத்தி, வெற்றிலை, சோளம் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகிறது. இருந்தாலும் அதிகபட்சமாக நெல் சாகுபடி தான் நடைபெறும். தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.97 லட்சம் ஏக்கரில் நடைபெற்றது.
தற்போது அதற்கான அறுவடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்கள் மற்றும் பகல் நேரங்களிலும் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்களை அறுவடை செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் நடந்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் வடகிழக்கு பருவமழையும் வழக்கத்திற்கு மாறாக கூடுதலான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய அரசின் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் துல்லியமாக கணித்து அறிவிப்பு தந்துள்ளது போல் வழக்கத்தை விட அதிகளவு மழை பொழிவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் காவிரி சமவெளி மாவட்டங்களில் முன்பட்ட குறுவை அறுவடை துவங்கியுள்ள நிலையில் மழை பெய்து கொண்டிருப்பதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் நனைந்து வருகின்றன.
இதனால் நெல் மணிகளில் கொள்முதல் செய்வதற்கான வழக்கமான ஈரப்பதம் 17 சதவீதத்தை விட இயற்கையாகவே கூடுதலாக இருக்கின்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 எண்ணிக்கைக்கு குறைவில்லாத நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தும் மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டுமே நெல் உலர்த்தும் இயந்திரங்களின் வசதிகள் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லில் ஈரப்பதம் 25 சதவீதம் இருந்தாலும் அவற்றினை எக்காரணம் கொண்டும் தர வெட்டு தர கட்டுப்பாடு மற்றும் விலை குறைப்பு என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லினை கொள்முதல் செய்வதற்கான மத்திய அரசின் சிறப்பு அனுமதி ஆணையினை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
அதனை இந்திய அரசும் எக்காரணம் கொண்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏற்று இந்திய உணவு அமைச்சகமும் மற்றும் இந்திய உணவுக் கழகமும ஈர நெல் கொள்முதல் குறித்த அரசாணையினை நிரந்தர அரசாணையாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும், இந்திய அரசின் உணவு கழகத்தின் மூலமோ அல்லது மத்திய அரசின் நபார்டு வங்கியின் நிதி உதவியோடு அனைத்து நெல் மற்றும் கோதுமை கொள்முதல் நிலையங்களிலும், நிரந்தர நெல் உலர்த்தும் இயந்திரங்கள் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உலர்த்தும் இயந்திரங்கள்
அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 எண்ணிக்கைக்கு குறைவில்லாத நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தும், மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டுமே நெல் உலர்த்தும் இயந்திரங்களின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.