திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உயர் கல்வித்துறை - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மாபெரும் தமிழ் கனவு திட்டம் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ் இணையக் கல்விக்கழகம் உயல்கல்வித்துறையுடன் இணைந்து, மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் 100வது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்தக் கட்ட நிகழ்ச்சியானது, 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது.
உலகின் செழித்தொங்கிய பண்பாடுகளில் முதன்மையான, தமிழ் பண்பாட்டின் பெருமைகளையும், வளமையையும், அது எதிர் கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு.
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும், நாகரிகமும், உயர் தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழர் தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின்கீழ் சிறந்த சொற் பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும், மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும். தமிழ்ப்பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும். இங்கு பகிரப்படும் கருத்துக்களைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன் பிற மாணவர்களிடமும் இந்தக் கருத்துக்களைக் கொண்டு சேர்த்திடுமாறு கோட்டுக் கொள்கிறேன்.
உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தகக் காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், ஜி.டி.என் கல்லூரி முதல்வர் சரவணன், எம்.வி.எம் கல்லூரி முதல்வர் லட்சுமி பலர் கலந்து கொண்டனர்.