*ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திண்டுக்கல் : செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,000 ஆடுகள், 1,500 சேவல்களை பலியிட்டு பிரமாண்டமான முறையில் அசைவ விருந்து தயாரித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டி புனித செபாஸ்தியார் திருத்தல ஆடி திருவிழா கடந்த ஆக.3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாபெரும் அன்னதானம் நேற்று இரவு விடிய, விடிய பிரமாண்டமாக நடந்தது. முன்னதாக நேற்று காலை செபஸ்தியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி, புனிதருக்கு காணிக்கை பவனி நடந்தது.
இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்த செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்விதமாக அரிசி, ஆடு, கோழி, காய்கறிகள் காணிக்கையாக படைத்தனர்.
தொடர்ந்து 1,000 ஆடுகள், 1,500 சேவல்கள், 4 டன் அரிசி, 2 டன் தக்காளி, 1.5 டன் கத்தரிக்காய், 400 கிலோ இஞ்சி, 1.2 டன் பூண்டு, 3.5 டன் வெங்காயம், 300 கிலோ பச்சை மிளகாய் ஆகியவற்றை கொண்டு பிரமாண்டமான முறையில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் பூஜைக்கு பின் விடிய விடிய கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமையின்றி கலந்து கொண்டு உணவருந்தினர். இன்று தேர் பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது.
குழந்தைகள் ஏலம்
செபஸ்தியார் ஆலய திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் வைத்திருந்த 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளை கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். பின்னர் கோயில் நிர்வாகத்தினர் ஏலம் விட அதில் தங்கள் குழந்தைகளை ஏலம் எடுத்து சென்றனர். இந்த ஏலத்தில் ரூ.500 முதல் ரூ.5000 வரை குழந்தை ஏலம் விடப்பட்டது. பின்னர் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்திய புறா ரூ.300க்கு ஏலம் விடப்பட்டது.