திண்டுக்கல்: திண்டுக்கல் மாணவி நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரத்தில் மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு இருந்துள்ளது.
நீட் சான்று மோசடி - மாணவி, பெற்றோர் கைது
பழனியைச் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்துள்ளார். 228 மதிப்பெண் பெற்ற நிலையில் 456 மதிப்பெண் பெற்றதாக போலியாக நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துள்ளனர். நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த விவகாரத்தில் மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவரது தந்தை சொக்கநாதர், தாயார் விஜய முருகேஸ்வரி கைது செய்யப்பட்டனர்.
போலிச்சான்று மூலம் மருத்துவ சீட் பெற்று மோசடி
போலி நீட் மதிப்பெண் சான்று கொடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட் பெற்றுள்ளார். முதலில் கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சீட் பெற முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாணவர் சேர்க்கை விவரம் அனுப்பி வைக்கப்பட்டதில் மோசடி அம்பலமானது.
நீட் போலிச்சான்று - மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு
GPay மூலம் மாணவியின் தாயார் 2 முறை பணம் அனுப்பியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்க மேற்குவங்க கும்பலுக்கு 2 முறை ரூ.25,000, ரூ.15,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு மின்னஞ்சல் போன்று போலி மின்னஞ்சல் கணக்கு உருவாக்கி அதன் மூலம் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பியுள்ளனர். நீட் போலிச் சான்றிதழ் தயாரித்த மேற்குவங்க கும்பல் குறித்து திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

