*சீரமைக்க கோரிக்கை
போச்சம்பள்ளி : காவேரிப்பட்டணம் ஒன்றியம், பண்ணந்தூர் அப்புகொட்டாய் கிராமத்தில், கடந்த 27 வருடங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அப்புகொட்டாய் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இந்த நிழற்கூடத்தை பயன்படுத்தினர்.
தங்கள் கிராமங்களில் இருந்து விவசாய பொருட்களை விற்கவும், வாங்கவும் மற்றும் வெளியூர் செல்ல வருபவர்களுக்கு நிழற்கூடம் இளைப்பாறும் இடமாக இருந்தது.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் நிழற்கூடம் பழுதடைந்தது. இந்நிலையில் நிழற்கூடத்தில் மேற்கூறை, சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. அப்போது, நிழற்கூடத்தின் அடியில் யாரும் நிற்காததால் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை.
எனவே, அதிகாரிகள் நிழற்கூடத்தை நேரில் ஆய்வு செய்து, முற்றிலுமாக இடித்து அகற்றி விட்டு, புதியாக நிழற்கூடம் கட்டி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.