Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிட்டில் இந்தியா என்று முழங்கியவர்கள் இப்போது பேப்பர், பேனாவுடன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம். ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? இந்த பணியில் எத்தனை ஊழியர் பயன்படுத்தப்படுகிறார்கள்? ஒருவர் ஒரு நாளில் எத்தனை வாக்காளர்களை தொடர்பு கொள்வார்கள்? சனி, ஞாயிறு வேலை செய்வார்களா? குறைந்தது இருமுறை ஒரு வாக்காளரை தொடர்பு கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் கொடுக்க, திரும்ப வாங்க எத்தனை நாள் ஆகும்? எழுதப்படிக்காதவர்கள் 50 லட்சம் பேர் இருந்தால் அவர்களின் விண்ணப்பங்களை எப்படி, யாரை வைத்து நிரப்புவீர்கள்? வாக்காளரின் அனைத்து விவரங்களும் ஆதார் அட்டையில் உள்ளபோது அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்கவில்லை? ஒன்றிய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் மக்களின் சேவைக்கு ஏன் இத்தனை கேள்விகள்? காஸ் இல்லாத வீடுகளே கிடையாது என்று சொல்லும் மத்திய அரசு காஸூடன் ஆதார் இணைப்புக்கு பதில் வாக்காளர் அட்டை எண்ணை வாங்கி இருக்கலாமே? கடந்த தேர்தலில் வாக்களித்தவர் பட்டியல் உங்களிடம் இருக்கும்போது புது வாக்காளர்களையும், கடந்த முறை வாக்களிக்க முடியாதவர்களின் காரணத்துடன் அவர்களை இணைத்தாலே உங்களின் வேலை பாதியாக குறைந்தது விடுமே.

இறந்தவர் பற்றி ஆதார் கார்டு விவரங்களுடன் மரண சான்றிதழ் கொடுக்கப்படும்போது, அதை நேரடியாக கணினி மூலமாக அவர்கள் பெயர்களை வாக்களர் பட்டியல் இருந்து நீக்கிவிடலாமே... வல்லரசாகிக்கொண்டுவரும் நம் இந்தியாவில் இல்லாத சூப்பர் கம்ப்யூட்டர் அறிவா? நீங்கள் ஆதரிக்கும் ZOHO ஸ்ரீதர் வேம்பு அவர்களிடம் கொடுத்தால் அவர் சிறப்பாக செய்து கொடுத்துவிடுவாரே, ஏன் தரவில்லை? டிஜிட்டல் இந்தியா என்று முழங்கிய நீங்கள், உங்களின் அனைத்து வித அடையாள அட்டைகளிலும் BAR CODE, QR code போடும் நீங்கள் ஏன் இப்போது மட்டும் பேப்பர், பேனாவுடன் அலைகிறீர்கள்? சாமானியனான என் கேள்விகளுக்கு உங்களிடம் (தேர்தல் ஆணையம்) உள் நோக்கமிற்றி நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பத்திரிகையாளர்களையே சந்திக்காத தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பதில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில்தான் வருகிற 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் வருகிற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளது. இதுபற்றி அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.

பழைய பட்டியலை எப்படி பார்த்து தெரிந்து கொள்ள முடியும், 2005ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் தற்போது எப்படி வாக்காளர் பட்டியலில் இணைக்க முடியும் என்ற சந்தேகம் உள்ளது. எழுத படிக்க தெரியாதவர்கள், இணையதளத்தை பற்றி அறியாதவர்கள் எப்படி இதை புரிந்து கொள்ள முடியும். இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அடிக்கடி செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், தான் பதவியேற்று ஒரு வருடம் ஆகியும் இதுவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பத்திரிகையாளர்கள் அழைத்து தலைமை செயலகத்தில் முறைப்படி எஸ்ஐஆர் பற்றி பேட்டி கொடுக்கவில்லை. குறிப்பாக தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தும், அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.