Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிட்டல் சாதனம் உள்ளிட்ட காரணங்களால் இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர் கண் நோய்

தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை, பணிச்சூழலின் மாற்றங்கள் ஆகியவையால் இன்று கண் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானதாகியுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உலர் கண் நோய். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான கண் நிலையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலர் கண் நோய் என்பது கண்களில் உள்ள நீர் அளவு அல்லது தரம் போதுமானதாக இல்லாததால், கண்ணின் மேற்பரப்பு உரிய ஈரப்பதத்தை இழந்து, எரிச்சல், சிவத்தல், மங்கலான பார்வை மற்றும் ஒளியுணர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். கண்களில் உள்ள நீர் கண்ணைப் பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், தொற்றுகளை தடுக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உலர் கண் நோய், மிதமான அசவுகரியம் முதல் கடுமையான பார்வை குறைபாடு வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் இதழில் 2023ல் வெளியான ஒரு ஆய்வின்படி, உலகளவில் 11.59 சதவீதம் முதல் 57.47 சதவீத வரையிலான மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வயது மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், உலர் கண் நோயின் பாதிப்பு 20-30 சதவீத ஆக உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கம் (AIOS) தெரிவிக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருக்கும். இதற்கு மாசு, திரை நேரம் (screen time) மற்றும் காலநிலை மாற்றங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. மேலும் தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் திரைப் பயன்பாடு உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் உலர் கண் நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஆண்களை விடப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 50 வயது உள்ளவர்கள், உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்களுக்கு கண்கள் எளிதில் வறண்டு போகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், பிரச்னை இளம் வயதிலேயே தோன்ற தொடங்குகிறது. உலர் கண்கள் பிரச்னைக்கான முக்கிய காரணிகள் தற்போதைய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் சவுந்தரி கூறியதாவது:கண்களில் கொழுப்பு அடுக்கு, நீர் அடுக்கு, மற்றும் மியூகோசல் அடுக்கு என 3 அடுக்குகளை கொண்டது. இந்த மூன்று அடுக்குகளும் முறையாக பணியாற்றினால் உலர் கண் நோய் இருக்காது. வேதி பொருட்களால் கண்ணில் படும் போது நீர் அடுக்கு மற்றும் மியூகோசல் அடுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் மூட்டு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கும் நீர் அடுக்கில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு கண்களில் நீர் சுரக்காது. இதுபோன்று உலர் கண் பாதிப்பு ஏற்படுவதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எந்த ஒரு உடல் பாதிப்பு அல்லது நோய் இல்லாதவர்களுக்கு உலர் கண் நோய் வர முக்கிய காரணம் கொழுப்பு அடுக்கு பாதிப்பு தான். இது தான் தற்போது அதிகரித்து வருகிறது.

கண் சிமிட்டுவது குறைவதால் இந்த கொழுப்பு அடுக்கு பாதிப்பு ஏற்பட்டு உலர் கண் நோய் வரும். ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 14 முறை கண் சிமிட்ட வேண்டும். அதிக நேரம் செல்போன் அல்லது கணினி பார்க்கும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுகிறது. இதனால் கண் இமைகளில் இருக்கும் மீபோமியன் சுரப்பி ஆவியாக விடுகிறது. கண்களை தொடர்ந்து சிமிட்டுவதால் மீபோமியன் சுரப்பி கண்களில் இருக்கும் நீண்ட நேரம் சிமிட்டாமல் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உலர் கண் நோய்க்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில அறிகுறிகளுடன், கூடுதலான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக கண் உறுத்தல், கண்கள் சிவத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். மேலும் தொடர்ந்து கண்களில் இருந்து தண்ணீர் வருவதும் ஒரு வகையான உலர் கண் நோய் தான்.

எனவே, பாதிப்புகளை தவிர்க்க நீண்ட நேரப் பணிகளைச் செய்யும்போது நமது கண்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டும். கண்ணீர் ஆவியாவதைக் குறைக்க வறண்ட சூழல்களில் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இமைகளை உயர்த்தி பார்ப்பதை குறைக்க வேண்டும். கணினித் திரையை கண் மட்டத்திற்குக் கீழே இருக்குமாறு தாழ்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். 20-20-20 விதிமுறையை பின்பற்ற வேண்டும். அலுவலகத்தில் பணி புரியும் நபர்கள் அல்லது ஏசி-யில் அதிக நேரம் இருக்கும் நபர்கள் ஏசி காற்று நேராக கண்களில் படுவதை தடுக்க வேண்டும்.

அதேபோல காண்டாக்ட் லென்ஸ்கள் அதிக நேரம் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் கண்களில் ரத்த நாளம் இல்லை. ஆக்சிஜன் நேரடியாக கண்களுக்கும் செல்லும். ஆனால் காண்டாக்ட் லென்ஸ்கள் அதிக நேரம் அணிந்து இருந்தால் ஆக்சிஜன் முறையாக செல்லாமல் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும். கண்களுக்கு அது அதிக பாதிப்பு ஏற்படுத்தும். தற்போது 20 வயது மேல் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 100 பேரில் 15 பேர் உலர் கண் நோயால் பாதிப்பு அடைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.