டிஐஜி வழக்கை ரத்து செய்ய கோரி மனு நீங்கள் பலமான கட்சிதானே... அவகாசத்துக்கு தயங்குவது ஏன்? சீமானுக்கு நீதிபதி கேள்வி
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டிஐஜி வருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதற்கு சீமான் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், வேண்டுமென்றே கால தாமதம் செய்கின்றனர் என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘நீங்கள் ஒரு பெரிய பலமான கட்சி தானே. பின் ஏன் கால அவகாசம் கேட்டால் தயங்குகிறீர்கள்’’ என்றார்.
அப்போது சீமான் தரப்பில், ‘‘காவல் துறை அதிகாரி, எங்கள் கட்சியை அபாயகரமான கட்சி. யாசகம் கேட்கும் கட்சி’’ என்று கூறி வருகிறார் என கூறப்பட்டது. இதையடுத்து மனுவின் மீது இறுதி விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறும். இருவர் தரப்பிலும் கால அவகாசம் கேட்கக் கூடாது எனக் கூறிய நீதிபதி, இடைக்கால தடையை நீட்டித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.