சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்களுக்கு விசா மறுப்பு நோயாளிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை: டிரம்பின் புது உத்தரவால் அதிர்ச்சி
வாஷிங்டன்: சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மற்றும் கிரீன் கார்டுகளை மறுக்க அமெரிக்கா புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதால், இந்தியர் உட்பட பல நாட்டினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவில், அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழ நேரிடும் என கருதப்படும் வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுக்கும் ‘பொதுச் சுமை’ என்ற பெயரில் நூற்றாண்டு பழமையான குடியேற்ற விதிமுறை ஒன்று நடைமுறையில் உள்ளது. இதுவரை, காசநோய் போன்ற தொற்று நோய்களைக் கண்டறிவதற்காக மட்டுமே மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால், அதிபர் டிரம்ப் நிர்வாகம் இந்த விதியை மிகவும் கடுமையாக்கி, அதன் கீழ் வரும் நோய்களின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க வெளியுறவுத்துறை, உலகெங்கிலும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இருக்கும் நாள்பட்ட நோய்களுக்கு, ‘அவர்களின் வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவப் பராமரிப்பு’ தேவைப்படுமா என்பதை ஆய்வு செய்யுமாறு விசா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நோய்களின் பட்டியலில் இதய நோய்கள், சுவாச நோய்கள், புற்றுநோய்கள், சர்க்கரை நோய், வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல பாதிப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களையும் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில், உடல் பருமனால் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற அதிக செலவு வைக்கக்கூடிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வழிகாட்டுதலின் முக்கிய அம்சம் என்னவென்றால், விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆகும் என எதிர்பார்க்கப்படும் மருத்துவச் செலவுகளை, அரசிடம் இருந்து எந்தவிதமான நிதி உதவியையும் நாடாமலும், அரசு செலவில் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்காமலும் தாங்களே சமாளித்துக்கொள்ள போதுமான நிதி ஆதாரம் அவர்களிடம் உள்ளதா என்பதை விசா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைஅனைத்து வகை விசாக்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. டிரம்ப் உத்தரவால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* வயதானவர்களை குறிவைக்கிறாரா?
குடியேற்ற நல ஆர்வலர்கள் இந்த புதிய விதிமுறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘விசா விண்ணப்பங்களில் தங்களின் நோய்களைப் பற்றி யாரும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டியதில்லை. இந்நிலையில், மருத்துவப் பயிற்சி இல்லாத தூதரக அதிகாரிகளுக்கு ஒருவரின் நீண்டகால ஆரோக்கியம் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் கொள்கை மாற்றம், சட்டப்பூர்வமான குடியேற்றத்தை வெகுவாகக் குறைக்கும் என்றும், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பொதுவான நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கிவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம், இனிமேல் மிகவும் ஆரோக்கியமான மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே அமெரிக்கக் குடியேற்றம் என்பது சாத்தியமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளில் எடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

