தோனியிடம் வழக்கறிஞர் ஆணையர் சாட்சியம் பதிவு செய்வதை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
சென்னை: ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிவி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, தோனியிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரி தோனி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ஆணையராக ஜி.ஜெயஸ்ரீயை நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோனி நீதிமன்றத்திற்கு வந்தால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும். அது விசாரணையை பாதிக்கலாம். எனவேதான் அவரிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை இந்த நீதிமன்றம் நியமித்துள்ளது. இதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படுகிறது. மனுதாரரான சம்பத்குமார் தரப்பு தோனியை குறுக்கு விசாரணை செய்ய அனைத்து வாய்ப்புகளும் தரப்படும். எனவே, இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
