Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே பாலதோட்டனப்பள்ளி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் மூன்று யானைகள், ஜார்கலட்டி வனப்பகுதியில் ஒற்றை யானை உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் அச்ச மடைந்து வந்தனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தேன்கனிக்கோட்டை பகுதியில் 10 பேர், ஜவளகிரி பகுதியில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவசாயிகளுடன் இணைந்து யானைகளின் நடமாட்டத்தை இரவு, பகல் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி, நேற்று இரவு தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் 20 பேர் கொண்ட வனத்துறையினர், தாவரகரை வனப்பகுதியிலிருந்து 3 யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியுள்ளனர். அப்போது பாலதோட்டனப்பள்ளி அருகே உள்ள தனியார் பட்டா நிலத்தில் உள்ள கிரீன்அவுஸ் அருகே யானைகள் செல்லும்போது தாழ்வாக சென்ற மின் கம்பியில் ஒரு ஆண் யானை சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயினி சம்பவ இடம் சென்று இறந்த யானையை பார்வையிட்டார். இறந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும். 8 அடிக்கும் கீழ் மின்கம்பி சென்றுள்ளதால் அதில் யானை சிக்கி மின்சாரம் பாய்ந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையின் உடலை பள்ளத்தில் இருந்து சமமான பகுதிக்கு கொண்டு வந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் யானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து யானை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.