Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசு கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாய் எல்லாம் திசை மாறிப்போகுதாமே..’’ என்றபடி முதல் கேள்வி கேட்டார் விக்கியானந்தா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல செ என்று தொடங்கி கம் என்று முடியுற நகரம் இருக்குது.. இந்த நகரத்துல பழமைவாய்ந்த விநாயகர், சிவன், பெருமாள், காளியம்மன் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்குது.. பழமையான கோயில்கள்ல வருஷம் முழுவதுமாக வரக்கூடிய குத்தகை, வாடகை இனங்களும், பக்தர்கள் கொடுக்குற நன்கொடையும், கோயிலுக்கு வழங்கிய நிலங்கள், அதன்மூலம் வரக்கூடிய வருவாய்கள்னு பல லட்சங்கள் கிடைக்குதாம்..

ஆனா, இந்த வருவாய்களை எல்லாம் உரிய முறையில பெற்று கவர்மென்ட் கருவூலத்துல செலுத்துறதில்லையாம்.. அதுலத்தான் பெரிய குளறுபடியே நடக்குதாம்.. இதை கவனிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் கண்காணிப்பதும் இல்லையாம், ஆய்வு செய்றதில்லையாம்.. அதுமட்டுமில்லாம இந்த கோயில்கள்ல நுழைவாயில் பகுதிகளை தரைவாடகை விட்டு, பெரிய தொகை சம்பாதிக்குறாங்களாம்.. இப்படி தனிநபருங்க என்ஜாய் பண்றாங்களாம்..

திசைமாறிய வருவாயை கருவூலத்துல சேர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை தரப்பினரின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம்’’ என தர்மயுத்தம் புலம்பி தவிக்கிறாராமே.. என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சி கூட்டணி சார்பில் தர்மயுத்த நாயகன் பலாப் பழம் சின்னத்தில் போட்டியிட்டார். தான் சார்ந்த சமுதாய வாக்குகளையும், இலைக்கட்சி நிர்வாகிகளின் மறைமுக ஆதரவையும் நம்பி பணத்தை வாரி இறைத்து செலவிட்டுள்ளார் தர்மயுத்தம்..

செலவு செய்த கணக்கை வைத்து, எப்படியும் 4 லட்சத்திற்கு குறையாமல் வாக்கு கிடைக்கும் என கணக்கு போட்டு வைத்திருந்தாராம்.. தனக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இலைக்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க ெசய்ய வேண்டும் என்பதை மட்டுமே குறியாக வைத்து வேலை பார்த்தாராம்.. அவர் எதிர்பார்த்தபடி இலைதரப்பு வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்துவிட்டாராம்.. ஆனால், வாக்குகள் மட்டும் அவர் போட்ட கணக்குப்படி வரவில்லையாம்.. கூட்டிக் கழித்து பார்த்தபோது தான் விடை தெரியவந்ததாம்..

தர்மயுத்த நாயகனோடு இணை பிரியாமல் கூடவே இருந்த தாமரை தரப்பு மாவட்ட நிர்வாகத்தை தர்மயுத்தத்தின் ஆதரவாளர்கள் மதிக்காமல் இருந்துருக்காங்க.. இதை மனதில் வைத்திருந்த தாமரை தரப்பின் மாவட்ட நிர்வாகம் மற்றும் அவரது தரப்பினர் முடிந்தவரை பணத்தை வசூலித்துவிட்டு வேலை பார்க்காமல் இருந்ததும், இதனாலேயே தனக்கு வாக்கு குறைந்துள்ளதும் தேர்தல் முடிவிற்கு பிறகு தர்மயுத்தத்துக்கு தெரியவந்துள்ளதாம்..

இதனால், அதிர்ச்சியடைந்த தர்மயுத்தம், என்னுடனேயே இருந்து கொண்டு தாமரை தரப்பினர் துரோகம் செய்துவிட்டனரேன்னு பார்ப்போர், வருவோரிடம் எல்லாம் கூறி புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தோல்வியால பிரபல நடிகர் கட்சியில் இணைந்த மகளிரணியால் அப்செட்டில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மக்களவை தேர்தலில் கடலோர தொகுதியில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட தனக்கு வேண்டிய நபரை மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ நிறுத்தி இருந்தார்.

தேர்தல் முடிவில் வேட்பாளர் படுதோல்வி அடைந்ததால் வெளியே சொல்ல முடியாமல் மணியானவர் இருந்து வருகிறாராம்... இலைக்கட்சி தோல்வியால் நகர மகளிர் அணி துணை செயலாளராக இருந்து வருபவர், திடீரென கட்சியில் இருந்து விலகி ஏராளமான மகளிர்களுடன் பிரபல நடிகர் கட்சியில் இணைந்துவிட்டார். இதில் ஏற்கனவே தலைமையிடத்தில் போட்டி போட்டு கடலோர மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட தனது ஆதரவாளரான வேட்பாளர் தோல்வியை தழுவிய நிலையில் மகளிர்களும் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்ததால் மணியானவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாக அவரது ஆதரவாளர்களுக்குள்ளே பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மீண்டும் திடீரென ஒருங்கிணைப்பு குழு உருவானதற்கு காரணம் ஏதாச்சும் இருக்கிறதா..’’ என கடைசியாக ஒரு கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘ஒரு காலத்தில் இலைக்கட்சியின் மீடியா ஆர்கனைசராக இருந்த பெங்களூருகாரரு, அப்புறம் கொஞ்சநாள் தனி ஆவர்த்தனம் செஞ்சாரு.. இதற்கிடையில் தேனிக்காரர் அணியில் தன்னை இணைச்சுக்கிட்டாரு.. அப்புறம் அந்த அணியின் கொபசெ ரேஞ்சுக்கு மாறினாரு.. சேலத்துக்காரரையும் கடுமையாக வறுத்தெடுத்தாரு..

அதாவது கிரி மாவட்டத்தின் மாஜி அடிக்கடி தேனிக்காரரை கடுமையாக அட்டாக் பண்ணுவாரு.. அந்த நேரத்தில் எல்லாம் பெங்களூர்காரரு, தடலாடியாக பிரஸ்மீட் நடத்தி சேலத்துக்காரரை அட்டாக் பண்ணுவாரு.. இதனால் அவர் மீது செம கடுப்பில் இருந்தாரு சேலத்துக்காரரு.. இதற்கிடையில் பொலிடிக்கலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ரேஞ்சில் சேலத்துக்காரர் அணியில் சேர்வதற்கு வலையும் விரிச்சாரு பெங்களூர்காரரு.. ஆனாலும் சேலத்துக்காரரு பிடிகொடுக்கலையாம்.. இதேபோல் சேலத்துக்காரரிடம் தூது விட்டு சிக்னல் கிடைக்காத 2 மாஜிக்களும் இருந்தாங்களாம்..

இவங்க மூணுபேரும்தான் இப்போது திடீரென இலைக்கட்சி ஒருங்கிணைப்புக்குழுனு ஒண்ண ஆரம்பிச்சிருக்காங்களாம்.. இவங்க மூணுபேரும் சேலத்துக்காரரை மீட் பண்ண டேட் கேட்டு காத்திருக்காங்களாம்.. இது ஒருபுறமிருக்க, தேனிக்காரரின் அரசியல் கணக்குப்படி தற்போது அவரு வேறு எந்த ஜானரிலும் பொலிடிக்கல் செய்ய முடியாதாம்.. அதனால் இலைக்கட்சியில் எப்படியாவது ஐக்கியமாக வேண்டும் என்ற முடிவில் இருக்காராம்.. அவருடைய தூதுவர்களாகத்தான் இந்த மூணுபேரும் ஒருங்கிணைப்பு கோஷத்தை கையில் எடுத்திருக்காங்கன்னு பேசிக்கிறாங்க விவரம் அறிஞ்ச ரத்தத்தின் ரத்தங்கள்...’’ என முடித்தார் விக்கியானந்தா.