பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பங்களாகுட்டே பகுதியில் எஸ்.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. இதுவரை மொத்தமாக 7 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவையனைத்தும் தடயவியல் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எலும்புகளுடன் ஒரு அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது. அதன்மூலம் அங்கு புதைக்கப்பட்டிருந்ததில் ஒருவருடைய அடையாளம் தெரியவந்திருக்கிறது. அந்த அடையாள அட்டையின் அடிப்படையில் அந்த நபர் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள ஷெட்டிகேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பா (70) என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மைசூருவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற ஐயப்பாவைக் காணவில்லை என்று அப்போதே அவரது மகன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் காணாமல் போன ஐயப்பாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது அடையாள அட்டை, தர்மஸ்தலாவில் எலும்புக்கூடுகளுடன் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக எஸ்.ஐ.டி தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகிறது.