தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம்; தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா கோரிக்கை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலாவின் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள புகாரை விசாரணை நடத்த சிறப்பு விாசரணை படை அமைக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.கோபாலகவுடா வலியுறுத்தினார்.
இது குறித்து பெங்களூரு பிரஸ்கிளப்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.கோபாலகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தர்மஸ்தலா கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது மனித குலத்தின் மாண்பை சீர்குலைக்கும் புகாராக இருப்பதால், சாமானிய புகாராக எடுத்துள்ள கொள்ளாமல் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தர்மஸ்தலாவில் நடந்துள்ள சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டுமானால், மாநில அரசு சிறப்பு விசாரணை படை அமைக்க வேண்டும். புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுப்பதை வீடியோவில் பதிவு செய்வதுடன், உடல்களை தடயவியல் மையத்திற்கு அனுப்பி மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். இந்த சோதனை அறிக்கை மற்றும் சோதனை நடத்திய நிபுணர்களின் வாக்கு மூலங்களையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து, சட்டப்படி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் இப்புகாரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். சிறப்பு நீதிபதி மற்றும் அரசு வக்கீல் நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு வழக்கு விசாரணையின்போது, நீதி தாமதமாக வழங்கினால், நியாயம் காலாவதியாகிவிடும். ஆகவே எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அதை உடனுக்குடன் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் கருத்தை ஆதாரமாக எடுத்து கொண்டு, தனி நீதிமன்றத்தின் மூலம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.