*எஸ்பியிடம் பெண்கள் புகார்
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு, ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தர்மபுரி இலக்கியம்பட்டியில், ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், சென்று பெண்களை அணுகி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி பெற்று தருவதாக கூறினர்.
கம்பைநல்லூர், நத்தமேடு, லளிகம், நல்லம்பள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, பாகல்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிகளை ஒன்றிணைத்து, அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளில், முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் கடன் உதவி பெற்று கொடுத்தனர்.
இதில் உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்திற்கு பதில், ரூ.84 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். கடன் வாங்கிய பெண்கள் மாதந்தோறும் பணத்தை தவறாமல் கட்டி வந்துள்ளனர். ஆனால், சிலரது பணத்தை மட்டும் வங்கியில் செலுத்தி விட்டு, சிலரது பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர்.
இந்த நிலையில், வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் வங்கி கணக்கை முற்றிலுமாக முடக்கி வைத்தனர்.
இதனையறிந்த பெண்கள், வங்கிக்கு சென்று கேட்ட போது, கடன் தொகை முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே, அனைத்து வங்கி பரிவர்த்தனையும் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பணம் வசூல் செய்த தொண்டு நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, உரிய பதிலை தெரிவிக்கவில்லை.
சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம், சுமார் ரூ.50 லட்சம் ஏமாற்றிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஏமாற்றிய ரூ.50 லட்சத்தை வசூல் செய்து, வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.