தர்மபுரி : தர்மபுரி பாரதிபுரம்- வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் ரூ.36.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தர்மபுரி ரயில்நிலையம் தென்மேற்கு ரயில்வே துறையின், பெங்களூரு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் மட்டும் பிரதான நகரங்களை இணைக்கும் முக்கிய நான்கு இடங்களில், ரயில்வே பாதையை கடந்து சாலை செல்கிறது. வெண்ணாம்பட்டி, குமாரசாமிபேட்டை, கடகத்தூர், அதியமான்கோட்டை ரயில்வே கேட்டை கடந்தபடி, இந்த ரயில் பாதை செல்கிறது. வெண்ணாம்பட்டியை தவிர மீதமுள்ள 3 இடங்களிலும், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பால பணிகள் மட்டும் கிடப்பில் இருந்தது.
வெண்ணாம்பட்டி ரயில்வே கேட், தர்மபுரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளதால், அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருப்பது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, பள்ளி நேரங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வழியாக பயணிகள் ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில்கள் கடந்து செல்லும்போது, நாளொன்றுக்கு 36 முறை இப்பாதை அடைத்து திறக்கப்படுகிறது.
அப்போது 15 நிமிடங்களும், சில ரயில்கள் கடக்கும் போது சுமார் 30 நிமிடங்களும் ஆவதால், தர்மபுரி நகரிலிருந்து வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி, குள்ளனூர், தோக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மேம்பாலம் அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் பாலம் அமைக்கவும், அதனையொட்டி அணுகு சாலை அமைக்கவும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதால், அவற்றை கையகப்படுத்துவதோ அல்லது இழப்பீடு வழங்குவதோ சிரமம் மற்றும் பெரும் பொருள் செலவு ஆகும் என்பதாலும், மாற்று வழியில் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, பாரதிபுரத்தில் 66 அடி தார் சாலையிலிருந்து, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த வழியே மேம்பாலம் அமைப்பதால், நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்டவை எளிதாகவும், பாலம் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ள இயலும் எனவும் நெடுஞ்சாலைத் துறை திட்டம் வகுத்து, அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ரயில்வே துறையும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தமிழக அரசு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிலம் எடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு விட்டது. தற்போது பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பில்லர்கள் எழுப்பும் பணி சுறுசுறுப்பாக நடக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி பாரதிபுரம் 66 அடி சாலை - வெண்ணாம்பட்டிக்கு ரயில்வே தண்டவாளத்திற்கு இடையே, ரயில்வே மேம்பாலம் ரூ.36.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப்பணிகள் நிறைவடையும்,’ என்றனர்.


