*அத்தப்பூ கோலமிட்டு கேரள மக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று, நாடு முழுவதுமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரியில் சத்திரம் மேல்தெரு, ராமன்குட்டி நாயர் தெரு, அப்பாவு நகர், நெடுமாறன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடினர்.
விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் தயாரித்து படையலிட்டு வழிபட்டனர். அந்தந்த வீடுகளில் பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களை அழைத்து ஓணம் சத்யா விருந்தளித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.