*எஸ்பி மகேஸ்வரன் தகவல்
தர்மபுரி : பெரிய நகரங்களில் இருப்பது போல், தர்மபுரி மாவட்டத்தில் மாநாடு, கூட்டங்கள், போராட்டங்களை கண்காணிக்க, 360 டிகிரி கோணங்களில் இயங்கும் சுழலும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனம், தர்மபுரி மாவட்ட காவல்துறைக்கு விரைவில் வர உள்ளதாக எஸ்பி மகேஸ்வரன் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு நிகழ்ச்சி, மாவட்ட எஸ்பி அலுவலக வளாக மைதானத்தில் நடந்தது.
காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு பஸ், ஒரு லாரி, 6 வேன்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் ஒரு வருண் வாகனம், புகை குண்டு வீசும் ஒரு வஜ்ரா வாகனம், 25 இன்ஸ்பெக்டர், டிஎஸ்பிக்கள் பயன்படுத்தும் ஜீப்கள், 22 டூவீலர்கள் என மொத்தம் 53 நான்குசக்கர வாகனங்கள் உள்பட 75 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், காவல்துறையின் வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு எஸ்.பி., மகேஸ்வரன் கூறியதாவது: சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற பெரிய நகரங்களில் உள்ளது போல், க்யூஆர்டி என்ற 360 டிகிரி கோணங்களில் இயங்கும் அதிநவீன சுழலும் கேமரா பொருத்தப்பட்ட ஒரு வாகனம், தர்மபுரி மாவட்ட காவல்துறைக்கு விரைவில் வருகிறது. மாநாடு, கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, முழுமையாக கண்காணித்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க இந்த சுழலும் கேமரா பயன்படுத்தப்பட உள்ளது.
காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 100க்கு, யாராவது அழைப்பு விடுத்தால், போன் செய்தவர் எந்த லொகேஷனில் உள்ளார் என கண்டறிந்து, போலீசார் உதவி செய்ய நவீன எஸ்பிஎன்சிஆர் என்ற தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய 4 வாகனங்கள், காவல்துறைக்கு விரைவில் வரவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது. 32 ரோந்து பீட் இருந்தது. தற்போது, அதனை 60 ஆக உயர்த்தியுள்ளோம்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.