தர்மபுரி: தர்மபுரி அருகே கிணற்றில் தள்ளி கள்ளக்காதலியை கொல்ல முயன்ற எஸ்எஸ்ஐயை, சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில் உள்ள கிணற்றில் கல்லைப்பிடித்தபடி தத்தளித்த பெண் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விசாரணையில், அவர் ஒட்டப்பட்டி காமராஜர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி கோமதி (28) என்பதும், கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து தாய் வீட்டில், மகளுடன் வசித்து வந்துள்ளார். அங்கு வந்து கணவர் தகராறு செய்ததால் தர்மபுரி டவுன் போலீசில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு புகார் செய்ய சென்றார். அப்போது எஸ்எஸ்ஐ ராஜாராமுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
அவருக்கு ஒட்டப்பட்டி காமராஜ் நகரில், ராஜாராம் தனியாக வீடு எடுத்து கொடுத்து இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்துள்ளனர். இது அவரது மனைவிக்கு தெரிந்து தகராறு செய்யவே கடந்த 3 மாதங்களாக ராஜாராம் கோமதியுடன் தொடர்பை நிறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் ராஜாராமை சந்தித்து கேட்டதால் கடந்த 21ம்தேதி இரவு பெருமாள் கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றினால் பிரச்னை சரியாகும் என்று அழைத்து கோமதியை கிணற்றுக்குள் தள்ளி விட்டு தப்பியுள்ளார்.
பொதுமக்கள் அவரை மீட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கோமதி புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து ராஜாராமை கைது செய்தனர். இந்நிலையில், எஸ்எஸ்ஐ ராஜாராமை சஸ்பெண்ட் செய்து தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், நேற்று உத்தரவிட்டார்.