Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

தனுஷ்கோடி போல அழியும் அபாயம் சீர்காழி மீனவ கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்

*கருங்கல் கொட்டி தடுப்பு கட்டிதர கோரிக்கை

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் சுமார் 185 படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் ஆண்டு தோறும் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை கடந்த 10 ஆண்டுகளில் கடலுக்குள் சென்று விட்டதாக தெரிகிறது. இதே நிலை நீடித்தால் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளும் கடலுக்குள் சென்று விடும். எனவே மீனவர்களின் நலன் கருதி கடற்கரையில் கருங்கல் கொட்டி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் நாட்டார் நடேசன் என்பவர் கூறுகையில், மடத்துக்குப்பம், நாயக்கர்க்குப்பம் கடற்கரை பகுதியில் கடல் நீர் உட்புகுந்து வருவதால், பாறங்கற்கள் கொட்டி மீன் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆண்டுதோறும் சுமார் 40 மீட்டர் வரை கடல் உட்புகுந்து கிராமத்துக்குள் வந்து விட்டது கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடற்கரையில் இருந்த மின்கம்பங்கள் கட்டிடங்கள் கடலுக்குள் சென்று விட்டன.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் விரைவில் கருங்கல் கொட்டி தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மீனவ பஞ்சாயத்தார்கள் மாயாண்டி, சுந்தரமூர்த்தி, மணிமாறன் உடன் இருந்தனர்.