Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை: ரூ.85,000 கோடிக்கு ஆபரணங்கள் வாங்கி குவித்த மக்கள் : கடந்த ஆண்டை விட 40% அதிகம்: வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையும் அமோகம்

மும்பை: தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு, ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பொருட்கள் விற்பனையானதாக அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோல் நாடு முழுவதும் தந்தேரஸ் சிறப்பு விற்பனையில் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் விற்பனையானதாக நகை வியாபாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படும். இதில் முதல்நாள் தந்தேரஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செல்வத்துக்காக லட்சுமியையும் உடல் நலத்துக்காக தன்வந்திரியையும் வடமாநில மக்கள் வழிபடுவார்கள். லட்சுமி வழிபாட்டையொட்டி தந்தேரஸ் நாளில் தங்கம், வெள்ளி பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாளில் வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்களையும் வாங்குவார்கள்.

இந்த ஆண்டு தந்தேரஸ் பண்டிகையையொட்டி வடமாநிலங்களில் தங்கள், வெள்ளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை களைகட்டியது. இது குறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (கெய்ட்) கூட்டமைப்பினர் கூறியதாவது: தந்தேரஸ் பண்டிகை சிறப்பு விற்பனை இந்த ஆண்டும் நடைபெற்றது. இதில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கினர். தந்தேரசை முன்னிட்டு 2 நாட்களாக விற்பனை களைகட்டியது. மொத்தம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது என்றனர்.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பில் அடங்கிய அகில இந்திய நகை விற்பனையாளர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா கூறியதாவது: தந்தேரஸ் பண்டிகைக்காக தொடர்ந்து 2 நாட்கள் நகைக்கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. நடப்பு ஆண்டில் தந்தேரஸ் நெருங்கும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டு தந்தேரசுடன் ஒப்பிடுகையில் வெள்ளி விலை சுமார் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியை முதலீட்டுக்கு உகந்ததாக மக்கள் கருதுகின்றனர், என்றார்.

இதுபோல், மற்றொரு நகை விற்பனையாளர் அமைப்பு கூறுகையில், தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் பலர் வெள்ளியில் முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் வெள்ளி விற்பனை அபரிமிதமாக உயர்ந்தது. குறிப்பாக வெள்ளி நாணயங்கள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 முதல் 40 சதவீதம் அதிகரித்தது, என்றனர். அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை விற்பனை கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்டே கூறியதாவது: முந்தைய ஆண்டை விட நடப்பு ஆண்டு வெள்ளி நாணய விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

தந்தேரஸ் தினத்தில் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் குறைத்துள்ளது. எனினும், தங்கம் விலை உயர்வு காரணமாக மதிப்பு அடிப்படையில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் தந்தேரஸ் தினத்தில் தங்கம் விலை திடீர் சரிவை சந்தித்ததால் நகை வாங்க பலர் ஆர்வம் காட்டினர். ஒரு கிராம் முதல் 50 கிராம் வரை நாணயங்கள் வாங்கினர், என்றார். அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை விற்பனை கவுன்சில் துணை தலைவர் அவினாஷ் குப்தா கூறுகையில், ‘‘2ம் அடுக்கு மற்றும் 3ம் அடுக்கு நகரங்களில் வெள்ளி நாணயங்கள் விற்பனை அதிகமாக இருந்தது. தந்தேரசுக்காக 2 நாளில் தோராயமாக மொத்தம் 50 முதல் 60 டன் நகைகள் விற்பனையானதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.85,000 கோடி, என்றார்.

கெய்ட் அமைப்பினர் கூறுகையில், ‘‘தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர, நுகர்வோர் மற்ற பொருட்களை வாங்குவதிலும் மக்கள் கவனம் செலுத்தினர். வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ரூ.15,000 கோடிக்கு நடந்துள்ளது. மின்னணு மற்றும் மின்சாரப் பொருட்கள் விற்பனை சுமார் ரூ.10,000 கோடி. நுகர்வோர் பொருட்கள் விற்பனை ரூ.3,000 கோடி. அலங்காரப் பொருட்கள் விற்பனையும் அதிகம். தந்தேரசில் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இதில் தங்கம், வெள்ளி வர்த்தகம் சுமார் ரூ.85,000 கோடி,’’ என்றனர்.

வடமாநிலங்களில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் நகை விற்பனை 100 முதல் 120 டன் வரை இருக்கலாம் என அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை விற்பனை கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த நகை விற்பனை மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியை எட்டும், என்றனர். இதுபோல், நாடு முழுவதும் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள் உள்பட அனைத்து துறை வர்த்தகத்தையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.5 லட்சம் கோடிக்கு விற்பனை நடக்கும் என எதிர்பார்ப்பதாக கெய்ட் அமைப்பினர் கூறினர்.