Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிபி நியமன நடைமுறையை உடனே மேற்கொள்ள வழக்கு: விரைவில் விசாரணை

மதுரை: டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ளக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஆக. 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு டிஜிபியாக நியமிக்க வேண்டிய தகுதியானவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை அனுப்பவில்லை.

ஆனால், சங்கர் ஜிவாலை அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யவோ அல்லது யாரையாவது பொறுப்பு டிஜிபியாகவோ நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை கொண்டு அடுத்த டிஜிபிக்கான தகுதியான நபரை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. தமிழகத்தில் ஆணவக்கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடத்தை முறையாக நிரப்புவது அவசியம். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி ஒன்றிய உள்துறை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் துவங்குமாறும், தற்போதைய டிஜிபி ஓய்வுபெற்ற பின், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ, பொறுப்பு டிஜிபியை நியமிக்க கூடாது என்றும் இதற்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.