திருத்தணி: ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த மாதம் ஆடி கிருத்திகை விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆடி கிருத்திகை விழாவில் காவடி செலுத்த முடியாத பக்தர்கள் இன்று அதிகாலை முதலே மலைக்கோயில் படிகள் மற்றும் மலைப்பாதை வழியாக வாகனங்களில் வந்து மாடவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோயில் மாடவீதிகளில் பக்தர்கள் காவடிகளுடன் குவிந்து அரோகரா, அரோகரா என முழக்கமிட்டனர். பொது வரிசையில் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு கட்டண வழியில் 2 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார். பாதுகாப்பு பணியில் திருத்தணி போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.