Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: புரட்டாசி மாத முதல் சனிகிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று காலையில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருவள்ளூர்: திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்தஸ்ரீதேவி, பூதேவி சமேதஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்தே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரமாக காத்திருந்து பெருமாளை வழிபாடு செய்தனர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் வீதியுலா நடந்தது.

வழிநெடுகிலும் பொதுமக்கள் பெருமாளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதேபோல திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. பூங்கா நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயம், நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பேரம்பாக்கத்தில் உள்ள கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்கியுள்ளனர். அத்திகிரி மலையில் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளியஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி, அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் செய்திருந்தனர். இதுபோல் உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சை வண்ணப்பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா துண்ட பெருமாள், ஆதிகேச பெருமாள், திரிநீரகத்தான் பெருமாள், காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிச்சத்திரத்தில் உள்ள வீரராகப்பெருமாள், திருமுக்கூடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள், பழைய சீவரம் நரசிம்ம பெருமாள், உத்திரமேரூர்ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள்,ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் உள்ள பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு மேட்டுதெருவில் உள்ள வேதாந்த ஞானதேசிகஸ்ரீனிவாச பெருமாள், பழைய சீவரத்தில் உள்ள லட்சுமி நாராயணபெருமாள், வையாவூரில் உள்ள அப்பன் வெங்கடேசபெருமாள் மற்றும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், சித்தாமூர், லத்தூர், கூவத்தூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், கானத்தூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான அசைவ பிரியர்கள் கடைகளுக்கு வராததால், இறைச்சி, மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.