கட்டுக்கடங்காமல் குவிந்த பக்தர்கள் சபரிமலையில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் தரிசனம் கிடைக்காமல் பலர் திரும்பிச் சென்றனர்
திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இதனால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க கடந்த 3 தினங்களாக பம்பையில் இருந்து பக்தர்களை போலீசார் சிறிய, சிறிய குழுக்களாக சன்னிதானத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் பகுதியையும் தாண்டி காணப்பட்டது.
நேற்று இரவு வரை கடந்த மூன்று நாளில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை வரலாற்றில் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த மூன்று நாளிலேயே பக்தர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் உடனடியாக பம்பைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்ததால் நேற்று பம்பையிலேயே பக்தர்கள் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக வரிசையில் காத்திருந்தனர். இதனால் சேலம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் பம்பையில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இவர்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு சென்று தங்களது மாலைகளை கழட்டி பின்னர் ஊருக்குத் திரும்பினர்.
* உடனடி முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு
சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஏடிஜிபி ஸ்ரீஜித் கூறியது: முதல் நாளிலேயே உடனடி முன்பதிவு மூலம் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றும் (நேற்று) 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்தனர். வரும் நாட்களில் உடனடி முன்பதிவு 20 ஆயிரமாக கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* பேரிடர் மீட்புப் படை விரைவு
வழக்கமாக மண்டல கால பூஜையின்போது மாநில போலீசாருடன் கோவையில் இருந்து வரும் மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இம்முறை அதிவேக அதிரடிப்படை போலீசார் இதுவரை வரவில்லை. அதிரடிப்படை இருந்திருந்தால் சன்னிதானத்தில் நெரிசலை ஓரளவு குறைத்திருக்க முடியும். இந்நிலையில் கோவை அதிவேக அதிரடிப்படை, பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாரை சபரிமலைக்கு உடனடியாக கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறினார்.
* மாரடைப்பு ஏற்பட்டு பெண் பக்தர் பலி
கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த சதி(60) என்பவர் தன்னுடைய கணவருடன் நேற்று சபரிமலைக்கு வந்திருந்தார். சன்னிதானம் செல்லும் வழியில் அப்பாச்சிமேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதி மரணமடைந்தார்.
* தரிசன நேரம் அதிகரிப்பு
நேற்று காலை 11 மணிக்குப் பின்னர் சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. 12 மணியளவில் 18ம் படி அருகே கடும் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. பல மணிநேரம் காத்துக் கிடந்த பக்தர்கள் பொறுமை இழந்து தடுப்பு வேலிகளைத் தாண்டிச் செல்லத் தொடங்கினர். போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் நேற்று மதியம் 1 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2 மணிக்குத் தான் நடை சாத்தப்பட்டது.
* சபரிமலை நிலைமை மிக மோசம்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஜெயகுமார் கூறியது: சபரிமலையில் நிலைமை மிக மோசமாக உள்ளது. நடை திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தான் தற்போதைய நிலைமைக்கு காரணம். இதை சமாளிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றார்.


