4 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் ரூ.102 கோடியில் கட்டப்பட்ட யாத்ரிகர்கள் சமுதாய கூடம்: துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக வெங்கடாத்ரி நிலையம் (யாத்ரீகர் வசதி மையம்-5) தேவஸ்தானம் சார்பில் ரூ.102 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில் முன்பதிவு இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் இலவசமாக தங்கும் வகையில் 16 தங்குமிடங்கள், 2,400 லாக்கர்கள், 24 மணி நேர சூடான நீர் வசதி மற்றும் பிற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெங்கடாத்திரி நிலையத்தை நேற்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதனையடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.