திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை 3 மணியளவில் கோயில் முன் திரண்டிருந்த பக்தர்களின் சரணகோஷம் முழங்க தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். இதன் பின்னர் மாளிகைப்புரம் கோயில் நடையை புதிய மேல்சாந்தி மனு நம்பூதிரி திறந்தார். நேற்று முதல் கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கின. தினமும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும்.
கார்த்திகை 1ம் தேதியான நேற்று ஐயப்பனை தரிசிப்பதற்காக முந்தைய நாள் இரவில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக கடந்த இரு தினங்களாக பம்பையில் இருந்து சிறிய சிறிய குழுக்களாகவே பக்தர்களை போலீசார் சன்னிதானத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதனால் பம்பையிலேயே பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று இரவு வரை 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்தனர். கடந்த 2 நாளில் தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.
தங்கத் தகடுகளை அகற்றி சிறப்பு புலனாய்வுக் குழு பரிசோதனை
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று இக்குழுவைச் சேர்ந்த தனிப்படை போலீசார் சபரிமலையில் விசாரணை நடத்தினர். சபரிமலை கோயிலின் முன்புறம் துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் மற்றும் வாசலின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த தகடுகளை அகற்றி பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்திலேயே தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன.


