திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இன்று காலை வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. முந்தைய வருடங்களை விட இந்த சீசனில் நடை திறந்த அன்று முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். தினமும் 90 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடந்த சில தினங்களாக தரிசனத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தினமும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனாலும் முந்தைய மற்றும் பிந்தைய தேதிகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும் வருகின்றனர். இவர்களை திருப்பி அனுப்ப முடியாததால் தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது. அதன்படி இன்று காலை வரை தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் வார இறுதி மற்றும் விடுமுறை தினங்கள் என்ற போதிலும் பக்தர்கள் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இன்று முதல் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் வரை காணப்பட்டது.

