பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.64.30 கோடியில் புதிய தங்கும் விடுதி: 7 இடங்களில் இளைப்பாறும் மண்டபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருத்தலம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான இக்கோயில் நினைக்க முக்தித்தரும் சிறப்புக்குரியது. இங்குள்ள மலையே மகேசன் திருவடிவம். எனவே, மலையை வலம் வருவது (கிரிவலம்) இறைவனை வலம் வந்து வழிபட்டதற்கு நிகராகும். எனவே, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
குறிப்பாக, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சமீப காலமாக பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிரிவலப்பாதையில் புதிதாக ஒரு தங்கும் விடுதியை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி, கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் ரூ.64.30 கோடியில் 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 நபர்கள் தங்கும் வகையில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 2 நபர்கள் தங்கும் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகளும் அமைகிறது. அதுதவிர, குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் அமைகிறது.
நான்கு தளங்கள் கொண்ட இந்த தங்கும் விடுதி அறைகள் குளிர்சாதன வசதியுடன் லிப்ட், பார்க்கிங், உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இப்பணியை, ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், கிரிவலப்பாதையில் ரூ.22.11 கோடி மதிப்பில் 98367 சதுர அடி பரப்பளவில், 14 இடங்களில் 213 கழிவறைகள், 52 குளியல் அறைகள், 24 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் 213 இடங்களில் சிறுநீர் கழிப்பிட வசதி ஆகியவை அமைக்கப்படுகிறது.
ஒரு மண்டபத்தில் 550 நபர்கள் இளைப்பாறும் வகையில், மொத்தம் 7 இடங்களில் 61766 சதுர அடி பரப்பளவில் இளைப்பாறும் மண்டபங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்த நிலையை அடைந்துள்ளது. எனவே, இப்பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.