திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் போலி வலைதளங்களை நம்பி ஏமாற வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் அளித்த புகாரின்படி கூகுளில் திருப்பதியில் தங்குமிடத்தை தேடும்போது ஸ்ரீனிவாசம் ரெஸ்ட் ஹவுஸ் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அதில் அபிமன்யு என்ற நபர், தான் தேவஸ்தானத்தின் ஸ்ரீனிவாசம் வளாகத்தில் உள்ள வரவேற்பு அலுவலகத்தில் இருப்பதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தங்குமிடம் வழங்குவதற்காகஅந்த நபர், பெண் பக்தரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து கொண்டு ஏமாற்றியுள்ளார். போலி வலைத்தளத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பக்தர், 1930 குற்ற உதவி மையம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சமீப காலமாக, தேவஸ்தானத்தின் சேவைகள் என்ற பெயரில் போலி வலைத்தளங்கள் மூலம் பக்தர்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. எனவே, பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபர்கள் மற்றும் தரகர்களால் பக்தர்களை தொடர்புகொண்டால் முதலில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் எண்ணை அழைத்து அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
போலி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்கள் என்ற பெயரில் மோசடி நடந்தால், மோசடி செய்பவர்கள் மற்றும் தரகர்களின் விவரங்களை உடனடியாக விஜிலென்ஸின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். சுவாமி தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கான டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in அல்லது ttdevasthanams மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யுமாறும், இடைத்தரகர்களால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் பிற விவரங்களுக்கு தேவஸ்தானத்தின் கட்டணமில்லா எண் 155257 ஐ அழைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 70,472 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.25,247 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.85 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 9 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 7 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.