வத்திராயிருப்பு: கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோயிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் இக்கோயிலில் வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வழக்கமான நாட்களைவிட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இன்று கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் பிரதோஷத்தையொட்டி விருதுநகர், ராஜபாளையம், மதுரை, சிவகாசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.
பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பாலித்தீன் பைகள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்படும். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


