உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மாம்புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவி கண்ணனூர் அம்மன் ஆலய ஆடி மாத கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாம்புதூர் கிராமம் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள், தீபாராதனை காண்பித்தும் தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்தும் வேப்பிலை அணிந்தும் கோயிலை வலம் வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
பின்னர் கோயில் அருகே கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.