Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வளர்ச்சியடையும் தமிழகத்தின் 2ம் நிலை நகரங்கள் 2024-25ல் ஐ.டி துறையில் ரூ.15,000 கோடி ஏற்றுமதி செய்த கோவை: மதுரை, நெல்லை, சேலத்தில் ரூ.2300 கோடி வர்த்தகம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியால் 2000ம் ஆண்டு, சென்னையில் முதல் டைடல் பார்க் தரமணி பகுதியில் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னையின் வளர்ச்சிக்கு டைடல் பார்க் முக்கிய பங்கு வகித்தது. இது தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்தது. தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் கால் பதிப்பதற்கு இந்த டைடல் பார்க் தான் முக்கிய ஆதாரமாக இருந்தது. உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சென்னை போட்டியாக இன்றைக்கு இருக்கிறது என்றால் அதற்கு கலைஞரின் டைடல் பார்க்தான் காரணம்.

சென்னையை தொடர்ந்து, கோவையில் டைடல் பார்க் அமைந்துள்ளது. தற்போது, மதுரை, திருச்சி மற்றும் ஓசூரில் டைடல் பூங்காக்கள் முன்மொழியப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர, கோவையில் மேலும் ஒரு புதிய டைடல் பார்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. சென்னையை அடுத்த பட்டாபிராமிலும் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தகவல் தொழில்நுட்பத்துறையில் உலக அரங்கில் முன்னணியில் பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் ஐதராபாத் ஐ.டி.துறையில் அசுர வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதை சுட்டிக் காட்டி பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஐதராபாத் போல் மாற்றுவோம் என கூறினார். இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்துறையை மேம்படுத்தவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்டு செல்லவும் பல்வேறு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவு குவிந்து வருகிறது. வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் ஐடி, மோட்டார், காலணி போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கனவு திட்டம் ‘டைடல் பார்க்’ என்றால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் ‘மினி டைடல் பார்க்’ என்று கூறலாம்.

இந்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மக்களின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் முன்னேற்றம் அடையவும், சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பை உருவாக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, காரைக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், கரூர், திருவண்ணாமலை, நீலகிரி, நெல்லை, குமரி, நாமக்கல், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கி வரும் கோவை மாநகரம், தற்போது ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக காக்னிசெண்ட், ராபர்ட் பாஷ், டி.சி.எஸ், இன்போசிஸ், புரோட்டிவிட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் உட்பட கோவையில் தற்போது 700க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை கோவையில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனிடையே கடந்த 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து இரண்டாம் நிலை நகரங்களில் நகரங்கள் வாரியாக நடந்த ஏற்றுமதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இரண்டாம் நிலை நகரங்களில் மொத்தம் ரூ.15,105.9 கோடிக்கு கோவை நகரம் ஏற்றுமதி செய்துள்ளது.

இதற்கு அடுத்து ரூ.1,905.11 கோடிகளுடன் மதுரை இரண்டாம் இடத்திலும், ரூ.899.32 கோடிகளுடன் திருச்சி மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் நெல்லை (ரூ.251.91 கோடி), சேலம் (ரூ.130.60 கோடி), ஓசூர் (ரூ.15.10 கோடி) ஆகிய நகரங்கள் உள்ளன. கோவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் இருந்து ரூ.11 ஆயிரத்து 987 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

இதில் 28 ஆயிரத்து 621 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விளாங்குறிச்சி எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து ரூ.4,671.15 கோடிக்கும், 37 ஆயிரத்து 847 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘கே.ஜி.ஐ.எஸ்.எல்.’ சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து ரூ.6,972.03 கோடிக்கும், 3 ஆயிரத்து 12 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘ஸ்பான் வென்ச்சர்ஸ்’ என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து ரூ.443.56 கோடிக்கும் ஏற்றுமதி நடந்துள்ளது.

இதுவே மற்ற நகரங்களில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து மதுரையில் ரூ.1,612 கோடி, திருச்சியில் ரூ.154 கோடி, சேலத்தில் ரூ.130 கோடி, ஓசூரில் ரூ.15 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் கோவை ரூ.3,119 கோடிக்கும், மதுரை ரூ.292.95 கோடிக்கும், திருச்சி ரூ.745.13 கோடிக்கும், நெல்லை ரூ.195.89 கோடிக்கும் ஏற்றுமதி செய்துள்ளன.

கோவையில் உள்ள மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் ஏற்றுமதி கடந்த 2020-21 ல் ரூ.921.2 கோடியாகவும், 2021-22ல் ரூ.1,288.37 கோடியாகவும், 2022-23ல் ரூ.2,009 கோடியாகவும், 2023-24ல் 2,548.26 கோடியாகவும் இருந்த நிலையில், 2024-25ல் ரூ.3,119.16 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கியத் துறையாக இருந்து வருகிறது. இந்த துறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் பங்களிக்கிறது. தமிழ்நாட்டில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் இருப்பது, கல்வி நிறுவனங்களில் இருந்து ஆண்டுதோறும் அதிகளவிலான பட்டதாரிகள் வருவது மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களால் தகவல் தொழில்நுட்பத்துறை வேகமாக முன்னேறி வருகிறது.

இதில் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுவதற்கு கோவை பொருத்தமான இடமாக அமைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மேலும் முதன்மை நகரமான சென்னை தவிர்த்த இரண்டாம் நிலை நகரங்களில் கோவை முன்னணியில் இருக்கிறது’’ என்றனர்.

* 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டைடல் பூங்கா

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களைப் போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, சிப்காட் தொழில்துறை பூங்கா, டைடல் பூங்கா அல்லது மினி டைடல் பூங்காவை (நியோ டைடல் பார்க்) கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும். குறிப்பாக, வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு செயல்பாட்டு டைடல் பூங்கா அல்லது மினி டைடல் பூங்கா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐடி ஏற்றுமதி என்றால் என்ன?

ஐடி ஏற்றுமதி என்பது தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மென்பொருள் மற்றும் சேவைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதைக் குறிக்கிறது. தற்போது மென்பொருளின் தேவை எல்லாவற்றிலும் இருக்கிறது. செல்போன், வாட்ச் போன்றவற்றில் மட்டுமின்றி, இப்போது வரும் உயர்ரக கார்களிலும் மென்பொருள் பங்களிப்பு அதிகமாகி விட்டது. குறிப்பாக சாப்ட்வேர்கள், மொபைல் ஆப்கள் மற்றும் அவற்றுக்கான கோடிங்கள், பிரச்னை ஏற்படும்போது சரி செய்வதற்கான கோடிங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதே ஐடி ஏற்றுமதியாக உள்ளது.