திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் அளித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபுவை சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை ஆகியவை கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் தங்கமுலாம் பூசுவதற்காகவும், அவற்றில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் இவற்றை சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு இவை அனைத்தும் செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் அளித்திருந்தார். இந்த மோசடி குறித்து கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு துணை கமிஷனர் முராரி பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு கடந்த வருடம் தான் பதவி உயர்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணிகிருஷ்ணன் போத்தியை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் திருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், கீழ் மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே முராரி பாபுவை நேற்று இரவு பெருன்னாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.