தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு இரண்டாம் போக சாகுபடி பணிகள் முடிந்து நெல் அறுவடை பணி நடைபெற்றது. மேல்மங்கலத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இங்கு, அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் கடந்த 40 நாட்களாக கொட்டிவைத்து காத்திருந்தனர்.
கொள்முதல் நிலையத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், கொள்முதல் நிலைய வளாகத்தில் கொட்டியிருந்த நெல் மணிகள் சேதமடைந்துள்ளதாக கூறி அதை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம். இதை கண்டித்து விவசாயிகள் இன்று காலை நெல்மணிகளை பெரியகுளம் சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.