சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையில் 40 பேருக்கு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்ட நிறைவு சான்றிதழ்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் நடைபெற்ற முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் முதல் தொகுதி நிறைவு விழாவில், 40 பசுமைத் தோழர்களுக்கு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட நிறைவு சான்றிதழ்களை 40 பேருக்கு வழங்கினார். மேலும், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட சிறப்பிதழையும் வெளியிட்டார். அரசு இயந்திரத்தில் இளம் திறமையாளர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 மாவட்டங்களுக்கு 38 பசுமைத் தோழர்கள் மற்றும் மாநில அளவில் இருவர் என மொத்தம் 40 பசுமைத் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் முக்கிய இயக்கங்களான பசுமைத் தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்ற இயக்கம், ஈரநில இயக்கம் மற்றும் நெய்தல் மீட்சி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்க பிரத்யேகமான திட்ட மேலாண்மை அலகு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கூறிய முக்கிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றிய முதல் தொகுதி பசுமைத் தோழர்களது பணிக்காலம் ஜூலை 2025-ல் நிறைவடைந்தது. இத்திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 மாவட்ட அளவிலான பணிக்காண விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வரவேற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, தமிழ் மொழிப் புலமை, தலைமைப் பண்பு மற்றும் தரவு பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் மாத உதவித் தொகையாக ரூ. 65,000ம் பயணச் செலவினத்திற்கென கூடுதலாக ரூ. 10,000ம் பெறுவர். மாபெரும் வரவேற்பினைப் பெற்ற இத்திட்டத்தின் 2ம் தொகுதியின் 38 இடங்களுக்கு சுமார் 9000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தது, இந்திய அளவில் சுற்றுசூழல் நிர்வாகம் மற்றும் காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பசுமைத் தோழர்களுக்கு 30 நாள் அறிமுகப் பயிற்சியும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் னிவாஸ் ஆர். ரெட்டி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஸ்ரா, வனத்துறை சிறப்புச் செயலாளர் ஆஷிஸ் குமார் வஸ்தவா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் எம். ஜெயந்தி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ. பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் இயக்குநர் எம். வெங்கட ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.