சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளையும், கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (26.09.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகள் வழங்குதல் மற்றும் கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார். விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்து வருகின்றார்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 25 இலட்சம் ரூபாயை 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை முதலமைச்சர் அமைச்சர் 12 லிருந்து 50 ஆக உயர்த்தியுள்ளார். மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு (MIMS) திட்டத்தின் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்து நிதியுதவியை 10 இலட்சம் ரூபாயிலிருந்து இருந்து 12 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு, தற்போது பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தியுள்ளார். அதேபோல் சாம்பியன் டெவலப்மெண்ட் திட்டத்தின் (CDS) கீழ் பயன்பெறும் வயதிற்குட்பட்டோர் பிரிவு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 200 ஆக உயர்த்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும். வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும்.
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்ற விழாவில் உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதங்கம் வென்ற தமிழ்நாட்டின் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் அவர்களுக்கு 1.80 கோடி ரூபாய்க்கான காசோலை உள்பட துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, கூடைப்பந்து, வூஷு (Wushu), சாப்ட் டென்னீஸ் (Soft Tennis), ஹாக்கி, பளுதூக்குதல், பீச் வாலிபால், தடகளம், ஸ்குவாஷ், அலைச்சறுக்கு (Sailling), சைக்கிளிங், நீச்சல் போட்டி, டென்னிகோயிட்(Tennikoit), படகுப் போட்டி (Rowing). செஸ், வாலிபால், டென்னிஸ், வாள்வீச்சு, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பேட்மிண்டன், பனிச்சறுக்கு (Ice Skating), அகில இந்திய பல்கலைகழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 819 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றி, பணியின்போது மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் எஸ்.தீபா, ஆர்.தினேஷ், எம்.தினேஷ் குமார், பி.ஹரிஷ் ஆகிய நான்கு நபர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் அசோக் சிகாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் வே.மணிகண்டன். பொதுமேலாளர் திருமதி.சுஜாதா, ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன் ஆனந்த்குமார் வேல்குமார் செஸ் கிராண்ட்மாஸ்டர் செல்வி.ர.வைஷாலி உள்பட அரசு அலுவலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.