நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் ஆபீசில் கட்டுக்கட்டாக பணம்: விஜிலன்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கியது, கால்வாயில் வீசப்பட்ட பணமும் பறிமுதல்
* அதிகாரிகளுக்கு துணை நடிகைகளை சப்ளை செய்த டிரைவர், திடுக்கிடும் தகவல்
நெல்லை: நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக சிக்கி பணமும், கால்வாயில் வீசப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ பி காலனி 8வது தெருவில் நெல்லை மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெறும் தீயணைப்பு நிலைய பணிகள், தீயணைப்புத் துறையின் அனுமதிகள், தடையில்லா சான்று போன்றவை உரிய முறையில் வழங்கப்படுகிறதா என கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தீயணைப்புத் துறையின் பணிகளை ஒவ்வொரு நிலையம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் ஆய்வு செய்ய வசதியாக நெல்லையில் மண்டல அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில் துணை இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் 4 மாவட்டங்களிலும் வசூல் வேட்டை நடப்பதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு நெல்லை லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி எஸ்கால் தலைமையில் போலீசார் நேற்று பிற்பகல் 1 மணிக்கு திடீரென நுழைந்தனர். போலீசாரை கண்டதும், அங்கிருந்த தீயணைப்பு வீரர் செந்தில்குமார் பணத்தை வெளியே வீசி எறிந்துள்ளார். அது அங்குள்ள கழிவுநீர் ஓடையில் விழுந்துள்ளது. எனினும் போலீசார் அவற்றை சேகரித்து செந்தில்குமாரை பிடித்தனர்.
தொடர்ந்து, மாலை 6 மணி வரை நடத்திய சோதனையில் துணை இயக்குனர் சரவணபாபுவின் அறையில் உள்ள கபோர்டில் இருந்து 6 கவர்களில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணம் மற்றும் துணை இயக்குனருக்கு தற்காலிக டிரைவராக செயல்பட்ட தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு வீரர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 400 என மொத்தம் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 400 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர் செந்தில்குமாரிடம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக திருநெல்வேலியிலேயே சரவணபாபு பணியாற்றி வருகிறார். இவர், கட்டிடங்களில் அனுமதி கேட்டு தீயணைப்புத்துறைக்கு வரும் விண்ணபங்களை ஆய்வு செய்வதற்காக கட்டிடம் கட்டப்பட்ட பகுதிக்குச் செல்வார். பின்னர் கண்டிப்பாக அங்கு தீயணைப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று உத்தரவிடுவார்.
நேர்மையான அதிகாரியாக இருப்பார்போல், அதனால்தான் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கச் சொல்கிறார் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அங்குதான் அவரது ரகசிய பிளானே இருக்கும். அவர், தீயணைப்பு கருவி விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் டீலிங் போடுவார். ஒவ்வொரு கருவியும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். அதில் ஒவ்வொரு கருவிக்கும் 25 சதவீதம் கமிஷன் கிடைக்கும்.
லஞ்சம் வாங்குவதை விட, கமிஷனில் அதிகமாக பணம் கொட்டும். வெளியில் நேர்மைபோல தெரிந்தாலும், அவர் பெரிய அளவில் சம்பாதித்து வந்தார். இவருக்கு வலதுகரமாக செயல்பட்டவர்தான் செந்தில்குமார். இவர் தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறார்.
ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு சரவணபாபுவின் அலுவலகத்தில்தான் எப்போதும் இருப்பார். விசிட்டுக்கு செந்தில்குமாரின் காரில்தான் செல்வார்கள். செந்தில்குமார், அதிகாரிகளை மடக்குவதில் கெட்டியானவராம். துணை நடிகைகளையும் அதிகாரிகளுக்கு சப்ளை செய்வாராம். இதனால் எந்த அதிகாரி வந்தாலும் அவர்களை வளைத்துப் போட்டு விடுவாராம். தற்போது இருவருமே லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியுள்ளனர்.
* தூத்துக்குடியில் இருந்து வந்ததா?
தூத்துக்குடி சிப்காட்டில் அதிக தனியார் நிறுவனங்கள் தற்போது தொழில் தொடங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தீயணைப்புத் துறையிடம் இருந்து சான்று பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் தனி வாகனத்தில் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். எனவே துணை இயக்குநர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? கணக்கில் வராமல் இந்தத் தொகை அலுவலகத்திற்குள் எப்படி வந்தது? தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்து வரப்பட்டதா என பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகே லஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவரும்.
* மாதம் மாதம் ரூ.1 லட்சம் அன்பளிப்பு: காப்பாற்ற துடிக்கும் அதிகாரி
நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் ஞானமான ஒரு அதிகாரியும், சரவணபாபுவும் நெருக்கமான நண்பர்களாம். இதனால் அவர் இருக்கும் தைரியத்தில்தான் இவர் பணத்தை வாரி குவித்து வந்துள்ளார். இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் அன்பளிப்பாக வழங்கப்படுமாம். அந்த அதிகாரி இதுவரை தீயணைப்புத்துறையில் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லையாம்.
இவர் தன்னுடைய குழந்தையை தனியார் கல்லூரியில் ரூ.30 லட்சம் கட்டி படிக்க வைத்துள்ளாராம். ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியால் எப்படி இவ்வளவு பணத்தை கட்ட முடிகிறது. கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும், இவரே கொள்ளையடிப்பதால், கேட்பதற்கு ஆள் இல்லையாம். இவர், சரவணபாபுவை காப்பாற்ற தற்போதும் முயன்று வருகிறாராம். இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முன்னாள் டிஜிபி ஒருவர் மூலம் இந்தப் பதவிக்கு வந்தவராம்.
அவர் மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை சரிக்கட்டிவிடலாம் என்று கருதுகிறாராம். இதற்கான முயற்சியை எடுத்து வருகிறாராம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியும், தீயணைப்புத்துறை அதிகாரியும் தினமும் பேசாமல் இருக்கமட்டார்களாம். இருவரது செல்போன்களை ஆய்வு செய்தால் இருவரும் சிக்குவார்களாம். ஆனால் தற்போது சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் வந்ததால், அவர் சிக்கியுள்ளாராம்.


