துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அடையாறு குறிஞ்சி இல்லத்தில் சந்திப்பு: தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு
சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று அடையாறு குறிஞ்சி இல்லத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதனால் தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று காலை ஆழ்வார்ப்பேட்டையில் தனது தந்தையும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசிபெற்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதன்பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை ெசலுத்துகிறார். அதன்பிறகு அடையாறு குறிஞ்சி இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அவர்கள் முன்னிலையில் கேக்வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் வருவதால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
50 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வாழ்த்து கூற வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் வாழ்த்துகளை உதயநிதி நேரில் ஏற்றுக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகிறது. மேலும் மூத்த முன்னாடிகள், மகளிர், கர்ப்பிணி பெண்கள், திருநங்கைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைப்போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.


