வருவாய்த்துறை அலுவலகங்களில் ஆவணங்கள் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை: வருவாய்த்துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையைச்சேர்ந்த பா.அன்புவேல் என்பவர் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ள கோப்பினை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார் மனுதாரர் கோரிய தகவல்கள் அடங்கிய கோப்பு, தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை என்று தகவல் அலுவலர் வழங்கியுள்ளதை ஏற்க முடியாது. கோப்பு கிடைக்கவில்லை என்று பொது அதிகார அமைப்பு தெரிவிக்கும் பதில் அவர்களின் அலட்சிய போக்கையும், கவனக்குறைவையும் பிரதிபலிக்கிறது.
ஒரு மாத காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர், கோரிய கோப்பினை மீண்டும் தேடி கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு கிடைத்தவுடன் அதன் நகலை மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிடைக்கவில்லை என்றால் அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள அனைத்து நிலை அலுவலகங்களிலும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படுவது தொடர்பான நடைமுறைகளை பிறப்பிக்க வேண்டும்.
கோப்புகள் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப்பு கிடைக்கவில்லை என்றால் கோப்பினை மீள உருவாக்க நேரிடும் என்பதை அறிவுறுத்தியும், கோப்புகள் அழிக்கப்படும்போது பின்பற்றுவதற்கான நடைமுறைகளின் அவசியத்தை அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமிருந்து அறிக்கை பெற்று, அவற்றை இணைத்து ஒருங்கிணைந்த அறிக்கையாக வருவாய் துறை செயலாளர் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மனுதாரர்கள் தகவல்கள் கோரும் கோப்பு கிடைக்கப்பெறாத பட்சத்தில், அதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதனை தொடர்ந்து உரிய சான்றிதழை பெற்று கோப்பில் பராமரிக்கப்படவேண்டும். நில உடமை ஆவணங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலக பதிவறையில் பராமரிக்கப்படவேண்டிய நிரந்தர ஆவணங்களாகும். அதனை பெறுப்புடன் பாதுகாக்கவேண்டியது அனைத்து வருவாய் துறை அதிகாரிகளின் கடமையாகும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.