சென்னை: உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அண்ணா, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராசர், மனோன்மணியம், அழகப்பா, அண்ணாமலை, பெரியார், அன்னை தெரசா, திருவள்ளுவர், திறந்தநிலை பல்கலைமற்றும் ஆசிரியர் பல்கலை ஆகிய 13 அரசு பல்கலைகளை சார்ந்த பதிவாளர்கள், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் மாநில உயர்கல்வி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
உயர்கல்வி மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாநில மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணாக்கர்களின் பங்கேற்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் பாடப்பிரிவுகளின் கிரெடிட் கட்டமைப்பு பற்றியும், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி சூழல் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல், மாணவர்களின் மொழியாற்றலை மேம்படுத்துதல், கல்லூரி மாணாக்கர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையிலான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.