Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 10 துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: துறை வாரியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 10 துறையின் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, போக்குவரத்து துறை, உயர் கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இயற்கை வளங்கள் துறை, பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆகிய 10 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளது, முடிவுற்ற பணிகள் எத்தனை, அரசாணை பெறப்பட்டவை எத்தனை, செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு, என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார். அதேபோல், நில பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டு திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் வளர்க்கும் திட்டம், அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது, ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 மணிநேரம் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.

துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட உயர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், சா.மு.நாசர், மா.மதிவேந்தன், தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் துறை வாரியான செயலாளர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

* ‘அறிவித்தால் ஆணையாக வேண்டும்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசு துறைகளின் ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாக தகவல்களை கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும், அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும் என கூறியுள்ளார்.