Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 20 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடபட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 79 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 5 திருக்கோயில்களில் 4 முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

18 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தல் :

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 22.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வளாகம், பக்தர்கள் இளைப்பாறுதல் மண்டபம் கட்டும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமலை திருப்பதியில் அமைந்துள்ள இராமானுஜ ஜீயர் மடத்தின் அறைகளை சீரமைத்தல்; திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயிலில் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிகார மண்டபம், பாபநாச தீர்த்தம் மற்றும் துணிகள் சேகரிக்கும் மையம், பொருட்கள் வைப்பறை கட்டுதல் மற்றும் நந்தவனம் அமைத்தல்; இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 114 அடி உயரம் கொண்ட முருகர் சிலை அமைக்கும் பணி; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலின் கிழக்குப் பக்கம் புதிய தார் சாலை அமைத்தல், மடப்பள்ளி மற்றும் பிரசாத தயாரிப்பு கூடம் கட்டும் பணிகள்;

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் 3.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நரசிம்ம தீர்த்த குளத்தை சீரமைக்கும் பணி; மயிலாடுதுறை மாவட்டம், மேலையூர், பூம்புகார் கல்லூரியில் 2.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி; விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத்தை சீரமைத்தல்; தென்காசி மாவட்டம், கடையம் பெரும்பத்து, அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயிலில் 1.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரிவலப்பாதை அமைக்கும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சுவாமி மரத்தேர் செய்யும் பணி; கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி, அருள்மிகு திம்மராயசுவாமி திருக்கோயிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயிலில் 1.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுழைவாயிலுடன் கூடிய மதில் சுவர் அமைக்கும் பணி;

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைக்கும் திட்டத்தின்கீழ், 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், செரப்பணஞ்சேரி, அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், 2.95 கோடி மதிப்பீட்டில் கரூர் மாவட்டம், சோமூர், அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோயில், 1.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேட்டுமருதூர், அருள்மிகு ஆராவமிதீஸ்வரர் திருக்கோயில், 2.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பின்னவாசல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், 2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய ஆற்காடு, அருள்மிகு அனந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில், 2.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேப்பத்தூர், அருள்மிகு வீற்றிருந்தபெருமாள் திருக்கோயில், 1.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாஞ்சார், அருள்மிகு தாணுமாலீஸ்வரர் திருக்கோயில் ஆகிய 7 திருக்கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள் என மொத்தம் 79.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

5 திருக்கோயில்களில் 4 முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்தல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இயந்திரவியல் துறை ஆய்வகம்; 1.99 கோடி ரூபாய் செலவில் மயிலாடுதுறை மாவட்டம், ஒழுகைமங்கலம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மூவலூர், அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், திருசக்திமுற்றம், அருள்மிகு சக்திவனேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல், அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 4 திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்கள்; 2.32 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் மாவட்டம், ஒப்பிலியப்பன்கோவில்,

அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் குடியிருப்பு, செயல் அலுவலர் குடியிருப்பு, மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர், அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் குடியிருப்பு, பொறையார், செம்பனார்கோயில், மணல்மேடு, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், விழுப்புரம் மாவட்டம், எறையூர், செஞ்சி, திருக்கோவிலூர், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு மற்றும் சோழவந்தான் ஆகிய 13 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆய்வாளர் அலுவலகங்கள்; என மொத்தம் 6.77 கோடி ரூபாய் செலவிலான 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் ஜெ. பரணிதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.