இதழியல் துறையில் முதுநிலை பட்டயப் படிப்பு; ஆக.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனம் 2025-2026ம் கல்வியாண்டு முதல் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்குகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் பயிற்றுவிக்கப்படும்.
இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பு அளிக்கும் வண்ணம் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை நேற்று முதல் நடைபெறுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆகும். மேலும், இது தொடர்பான விவரங்களை https://cij.tn.gov.in// என்னும் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இக்கல்வி நிறுவனம் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும், காட்சி தொடர்பியல் திறன் உள்ளிட்ட இதழியல் கல்வியையும் வழங்க இருக்கிறது. இக்கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் வெளியூர் மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விடுதி வசதிகள் உள்ளன. ஊடகவியல் கல்வியைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.