கோபன்ஹேகன்: மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது. பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஆனால் நடைமுறையில் எவ்வாறு மற்றும் எப்போது செயல்படும் என்பதை தெரிவிக்கவில்லை.
டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் 11 வயதுக்கும் 19 வயதுக்கு இடைப்பட்ட இளையர்களில் 60 விழுக்காட்டினர் வெளியே செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அது சமூக ஊடகங்களின் விளைவு என்று பிரதமர் சுட்டினார். தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடிக்கின்றன. மேலும், அதிகமாக அடிமையாகுவதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள், உடல் ஆரோக்கியங்கள் பாதிக்கப்படுகின்றது என்றும் பிரதமர் ஃபிரடெரிக்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளிடம் அதிகரித்து வரும் மன அழுத்தம், சோர்வு, சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இம்முடிவு என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில், ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.