சென்னை: டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்து உள்ளது என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 12,264 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பரவலின் வீரியம் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகின்றன. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 1,171 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 7,998 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 1,278 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவ இயக்குனர்கள் டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு அளித்துள்ளது.
ஜனவரி முதல் அக்.3ம் தேதி முதல் இதுவரை டெங்குவால் 15,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை காலங்களில் ஆண்டுக்கு பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
மழைக் காலங்களில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், ஏ டி எஸ் வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.