சென்னை: உலகிலேயே மிக ஆபத்தான உயிரினம் கொசு தான் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கூடவே டெங்கு பாதிப்பும் உயர்ந்திருக்கும் சூழலில், சென்னை, கோவை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது சுகாதாரத் துறை. இப்படி இருக்க, ஏடிஸ் வகை கொசுக்கள் காரணமாகவே டெங்கு காய்ச்சல் பரவுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மழையினால் தேங்கியிருக்கக் கூடிய நன்னீரில் இந்த கொசுக்கள் உருவாகும் என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.
அதீத காய்ச்சலே டெங்குவிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு இருப்பதும் டெங்குவிற்கான அறிகுறியே எனத் தெரிவிக்கின்றனர். மூன்று நாட்களுக்கு மேலும் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முதியோர், குழந்தைகளை கொசுக்களை கடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வீட்டின் அருகே யாரேனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.டெங்கு பாதித்தவ்கள் நீர், பழச்சாறு உள்ளிட்ட திரவங்களை அதிக அளவில் பருகவேண்டும் என்றும் மருத்துவர்க் கூறுகின்றனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொசுக்களை அண்டவிடாமலும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் டெங்கு பாதிப்பை தடுக்கலாம் என உறுதிபடக் கூறுகின்றனர் மருத்துவர்கள். இதற்கிடையே, உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசுதான் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொசு கடியால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் மட்டுமே உலக அளவில் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் நடப்பாண்டில் மட்டுமே சுமார் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.