நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் நடைபாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகனுக்கு சொந்தமான வீடு தெலங்கானா மாநிலம் ஐதராபாத் லோட்டஸ் பாண்ட்டில் உள்ளது. இந்த வீட்டில் சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து பாதுகாப்பு ஊழியர்களுக்கு 30க்கு 20 அளவில் 3 அறை கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற ஐதராபாத் மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஜெகன்மோகன் வீட்டிற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 அறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.