*நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் முதன்முறையாக கடந்த 1985ம் ஆண்டு பழையை பஸ் நிலையம் எனப்படும் மத்திய பஸ் நிலையமும், அதன் எதிரே 2010ம் ஆண்டு புதிய பஸ் நிலையமும் கட்டப்பட்டன. இதில், பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி மூலம் பல்வேறு வணிக ரீதியாக சுமார் 31 கடைகள் வாடகை கட்டிடமாக இயங்கப்பட்டன. நகராட்சிக்குட்பட்ட இந்த கட்டிடத்தின் சில கடைகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பழுதான நிலை ஏற்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடைகளின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்த சம்பவம் நடைபெற்றது. இதனால், அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாக, கடையை காலி செய்ய கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், பலமுறை அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக இந்த மாதத்தில் கடந்த மே மாதம் 23ம் தேதியன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மே மாதம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள மேற்கூரைகள் சில இடங்களில் பெயர்ந்து விழ ஆரம்பித்தது. மேலும், மத்திய பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் வலுவிழந்து இருப்பதும், பக்கவாட்டு சுவர்கள் இடியும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு மூடப்பட்டது. மேலும் பழனி, உடுமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழித்தடம் அடைக்கப்பட்டு பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய பஸ் நிலையத்தில் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் மூடப்பட்ட அந்த கடைகளை இடிக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. ராட்சத பொக்லைன் கொண்டு, கடைகளின் மேல் சுவற்றிலிருந்து இடிக்கும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சி ஆணையாளர் குமரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பழுதான கட்டிடங்களை முழுமையாக இடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.