Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜனநாயகத்திற்கு ஆபத்து

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி விட்டது. கொஞ்சம் அசந்தாலும் பொதுமக்களின் வாக்குரிமை பறிபோய் விடும். அப்படிப்பட்ட அபாய விதிமுறைகளை கொண்டு நடைமுறைப்படுத்த உள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு பீகாரில் 68 லட்சம் வாக்குகள் பறிக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் எந்த முடிவும் இப்போது வரை கிடைக்கவில்லை. நாளை அங்கு முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் அதிமுகவும் பாஜவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொறுத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-05 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிறபோது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நவம்பர் 4ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ம் தேதி முடிவடையும். வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருமே புதிதாக கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தை ஒவ்வொரு பாகத்திலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கே வந்து வழங்குவார்கள். வாக்காளர்கள் அந்தப் படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை அலுவலர்கள் செல்வார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

படிவத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகலும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 4 முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும். அதன்பின் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, முந்தைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்திப் போகிறதா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆராய்வார்கள். ஏதேனும் முரண்பாடு இருந்தால் வாக்காளரிடம் விளக்கம் கேட்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே புதிதாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, பழைய வாக்காளர்கள் வேறு இடத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ, அல்லது புதிதாக யாரேனும் இணைக்கப்பட்டதற்கு ஆட்சேபனை இருந்தாலோ அதற்கான விண்ணப்பம் மூலம் முறையீடு செய்யலாம். இதை டிசம்பர் 9 தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை வாக்காளர் பதிவு அலுவலர் (ஈ.ஆர்.ஓ) ஆராய்வார். அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன்பின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும். இத்தனை கெடுபிடிகள், வரைமுறைகள் பெருநகரங்களில் கூட ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால் ஆயிரக்கணக்கான கிராமங்களில், முறையான நடைமுறை தெரியாத மக்கள் என்ன செய்வார்கள்?. அவர்கள் வாக்கு என்ன ஆகும்?. அதை விட முக்கியமாக இதை எல்லாம் நிரப்பித்தான் ஓட்டு போட வேண்டும் என்றால் அந்த ஓட்டே வேண்டாம் என்று புறக்கணிக்கும் மனநிலை மக்களுக்கு அதிகம். அது தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர திருத்தத்தை விட ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.